3 தொகுதி இடைத்தேர்தல் காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
3 தொகுதி இடைத்தேர்தல் காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : அக் 24, 2024 12:30 AM

பெங்களூரு : இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளுக்கும், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஷிகாவி தொகுதிக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை, சண்டூருக்கு பங்காரு ஹனுமந்த் ஆகியோர், பா.ஜ., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
சென்னப்பட்டணா 'சீட்' தனக்கு வேண்டும் என்று, பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் அடம்பிடித்ததால், அந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. நேற்று யோகேஸ்வர், காங்கிரசில் இணைந்தார்.
இதனால், சென்னப்பட்டணாவில் ம.ஜ.த., வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. நேற்றிரவு வரை அறிவிப்பு வெளியாகவில்லை.
மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் நேற்றுஇரவு வெளியிட்டது. சென்னப்பட்டணாவில் யோகேஸ்வர், ஷிகாவியில் வைஷாலி குல்கர்னி, சண்டூரில் அன்னபூர்ணா துக்காராமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னப்பட்டணாவில் யோகேஸ்வர் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். வைஷாலி குல்கர்னி, தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் செயல் தலைவருமான வினய் குல்கர்னியின் மகள். கொலை வழக்கில் தார்வாடுக்கு செல்ல வினய் குல்கர்னிக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், தந்தைக்காக வைஷாலி பிரசாரம் செய்தவர். இதனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஷிகாவியில் இம்முறை லிங்காயத் சமூகத்தின் வைஷாலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷிகாவியை கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் 'புது மூவ்' செய்துள்ளது. இரண்டு தொகுதிகளுக்கு, பெண்களை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.