3 நாள் நடந்த சிறுதானியம், இயற்கை விவசாய கண்காட்சி நிறைவு ரூ.23 கோடி உளுந்து ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்
3 நாள் நடந்த சிறுதானியம், இயற்கை விவசாய கண்காட்சி நிறைவு ரூ.23 கோடி உளுந்து ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்
ADDED : ஜன 08, 2024 07:00 AM

பெங்களூரு; ''கர்நாடகாவில் இருந்து 1,361 டன் உளுந்து ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளின் ஊக்கத்தொகை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என, விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
கர்நாடக விவசாய துறை சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 5ம் தேதி, சர்வதேச சிறுதானிய, இயற்கை விவசாய கண்காட்சியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். முதல் நாளில், 60,000 பேர் பங்கேற்றனர்.
நிறைவு நாளான நேற்று, விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி பேசியதாவது:
இதுவரை 61 கூட்டம் நடத்தி, 5.10 கோடி ரூபாய்க்கு, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து, 23.14 கோடி ரூபாய் மதிப்பிலான 1,361 டன் உளுந்து ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில், வெளிநாடு, உள்நாட்டை சேர்ந்த நிறுவனத்தினர் பங்கேற்றனர். 310 ஸ்டால்களில், 190 ஸ்டால்கள் இயற்கை மற்றும் சிறுதானியங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஸ்டால்களில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், விற்பனையாளர்கள், விவசாயிகள் குழுக்கள், சங்கங்கள், மத்திய, மாநில அரசு துறைகள், அமைப்புகள் பங்கேற்றன.
மாநிலத்தின் அனைத்து மாவட்ட விவசாயிகளும் தானியங்களை அதிகளவில் பயிரிட வேண்டும். குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் வளர்ந்து பொருளாதார தன்னிறைவு அடையலாம்.
தற்போது 2.47 ஏக்கர் சிறுதானிய உற்பத்திக்கு, 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை மேலும் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பாக இளம் தலைமுறையினர் விரும்பும் ரொட்டி, ராகி ரொட்டி, பீட்சா, பர்கர், நுாடுல்ஸ், பிஸ்கெட், முறுக்கு மற்றும் நவீன தானிய வகை பிரவுனி, பப் தின்ஸ், ராகி சாக்லேட், ஜாமுன் ஆகியவை செய்யலாம்.
இந்தாண்டு 16 மாநிலங்களை சேர்ந்த, 50 வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளை வழங்கினர்.
தானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 'விவசாய ஸ்ரீ' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்பேசினார்.