3 நாட்கள் லாட்ஜில் சிறை போலீஸ் மீது வியாபாரி புகார்
3 நாட்கள் லாட்ஜில் சிறை போலீஸ் மீது வியாபாரி புகார்
ADDED : ஜன 25, 2024 04:22 AM

பெங்களூரு மூன்று நாட்கள் லாட்ஜில் அடைத்து வைத்துத் தாக்கியதாக, எஸ்.ஐ., மீது, துணி வியாபாரி, போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு, கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 47. துணி வியாபாரி. இவர் கடந்த 12ம் தேதி சொந்த ஊரான, கோலார் மாவட்டம், முல்பாகல் சென்றார். வீட்டின் முன் நின்று, உறவினரான மணி என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அங்கு வந்த பெங்களூரு காட்டன்பேட் போலீசார், மோசடி வழக்கில், மணியை கைது செய்தனர். அவருடன் நின்று பேசிய வெங்கடேஷையும், கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர்.
ஆனால் வெங்கடேஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், லாட்ஜிற்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் அடைத்துள்ளனர். “என் மீது எந்த தவறும் இல்லை. என்னை விடுவித்து விடுங்கள்,” என, போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் கோபம் அடைந்த போலீசார், 'அதிகம் பேசினால் என்கவுன்ட்டரில் கொன்றுவிடுவோம்' என்று மிரட்டி உள்ளனர்.
மூன்று நாட்கள் கழித்து 15ம் தேதி, லாட்ஜில் இருந்து விடுவித்து உள்ளனர். 'இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது' என, போலீசார் மிரட்டி உள்ளனர். பயத்தில் இருந்த வெங்கடேஷ், யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் அவருக்கு குடும்பத்தினர் தைரியம் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காட்டன்பேட் எஸ்.ஐ., சந்தோஷ் கவுடா, கான்ஸ்டபிள்கள் பிரகாஷ், சச்சின் ஆகியோர் மீது பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.