ADDED : மார் 06, 2024 04:47 AM

லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கர்நாடக தொகுதிகள் இடம் பெறவில்லை. ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்துள்ளதால், தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது.
ஹாசன், மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர, பா.ஜ., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில், முன்னாள் முதல்வர்கள் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த, பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் நிர்வகிப்பு கமிட்டி கூட்டங்களில், இது தொடர்பாக ஆலோசனை நடந்தது. மூன்று முன்னாள் முதல்வர்களின் பெயரை சிபாரிசு செய்வது குறித்து, கருத்து வெளியானது.
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதியின், தற்போதைய எம்.பி., சதானந்த கவுடாவுக்கு, இதே தொகுதியில் சீட் கிடைக்கலாம். ஏனென்றால் இவருக்கே சீட் தர வேண்டும் என, தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
சமீபத்தில் காங்கிரசில் இருந்து, சொந்த கட்சிக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர், பெலகாவியில், மற்றொரு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை, ஹாவேரிக்கு பா.ஜ., வேட்பாளராக்கும்படி, ஆலோசனை வந்துள்ளது.
எனவே இவர்களின் பெயர்களும், உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறலாம்.

