சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
ADDED : அக் 23, 2024 06:40 AM

ஹாசன்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என, போலியாக ஆதார் அட்டை தயாரித்து, ஹாசனில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தின் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டினரை இந்த மாதம் துவக்கத்தில் இருந்து, கர்நாடக போலீசார் கைது செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, உடுப்பியின் மல்பேயில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தின் ஏழு பேர் கைதாகினர்.
இந்நிலையில், ஹாசன் டவுன் காட்டேஹல்லாவில் ஒரு வீட்டில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக வசிப்பதாக, ஹாசன் மாவட்ட குற்றப் பதிவு பணியக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த வீட்டிற்குச் சென்ற போலீசார், வீட்டில் வசித்த மூன்று பேரை பிடித்தனர். அவர்களின் ஆதார் அட்டைகளை சோதனை செய்தபோது, போலியானது என்பது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் பெயர்கள் ஜமால் அலி 25, பரூக் அலி, 24, அக்மல் ஹொக்கு, 45, என்பதும், வங்கதேசத்தின் டாக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. மேற்கு வங்க மாநிலத்தினர் என்று போலி ஆதார் அட்டை தயாரித்து, இங்கு வசித்தபடி கட்டட வேலை செய்தது தெரிந்தது.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த, சுபைர் என்பவரிடமும் விசாரணை நடக்கிறது.