பெங்களூரில் 3 கி.மீ., தொலைவை கடக்க 5 மணி நேரம்! வாகன ஓட்டிகள் கோபம்
பெங்களூரில் 3 கி.மீ., தொலைவை கடக்க 5 மணி நேரம்! வாகன ஓட்டிகள் கோபம்
ADDED : அக் 23, 2024 11:06 PM

பெங்களூரு: பெங்களூரில் மழையால் ஏற்பட்ட நெரிசலால், 3 கி.மீ., துாரத்தை கடக்கவே 5 மணி நேரம் ஆனது. 'சாலை வசதி சரியாக இல்லை' என, அரசு மீது வாகன ஓட்டிகள் கோபம் அடைந்தனர்.
கர்நாடக தலைநகரான பெங்களூரு, உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. தொழில் வளம் கொட்டிக் கிடப்பதால், மற்ற மாநிலத்தினர், வெளிநாட்டினர் கூட பெங்களூரில் அதிகம் வசிக்கின்றனர். தங்களது தேவைக்காக கார், பைக்குகளை வாங்கிக் கொள்கின்றனர். நகரில் தினமும் 80 லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள், சாலைக்கு வருகின்றன.
இதனால் எந்த சாலையைப் பார்த்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில் வேலைக்கு செல்பவர்கள், மாலையில் வீடு திரும்புவர்கள் நெரிசலில் சிக்கி நொந்து போகினர். சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பெங்களூரில், மழைக் காலத்தில் சொல்ல வேண்டியதில்லை.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் உள்ள சாலைகளில் தற்போது பெரும் பள்ளங்கள் விழுந்துள்ளன. பள்ளங்களில் வாகனங்களை இறக்கினால் பழுதடைந்து விடும் என்று கருதி, வாகன ஓட்டிகள் பள்ளங்களை தவிர்த்துச் செல்ல முயற்சிக்கின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மழை பெய்து சாலைகளும் குளங்கள் போல மாறி இருப்பதால், வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. ஆட்டோ, கார், பைக் சைலன்சர்களில் வெள்ளம் புகுந்ததால் சாலையின் நடுவே நின்று விடுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுபற்றி தெரியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹாரன்' செவித்திறனை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டால் சொல்லவே வேண்டாம்.
சிக்னல்களில் சிவப்பு விளக்கு மாறி, பச்சை விளக்கு எரிந்தாலும், சிக்னல் கோட்டின் முன் நிற்கும் வாகன ஓட்டிகள், வாகனங்களை வேகமாக எடுப்பது இல்லை. அப்போது தான் கியரைத் தேடுகின்றனர்.
சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால், ஐந்து நிமிடங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல, அரைமணி நேரம் ஆகும். இப்போது மணிக்கணக்கில் ஆகிறது.
நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், பெங்களூரின் பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, பெல்லந்துாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கம்போல வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து செல்ல, வாகன ஓட்டிகள் டென்ஷன் ஆகினர். கிளச்... கியரை மாற்றி, மாற்றி மிதித்து, வாகன ஓட்டிகளின் காலும், கையும் வலித்தது தான் மிச்சம்.
பெங்களூரின் கல்யாண் நகரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், எக்ஸ் வலைதள பக்கத்தில், 'மாலை 4:30 மணிக்கு அலுவலகம் முடிந்து, காரில் புறப்பட்டேன். அலுவலகத்தில் இருந்து வீடு 3 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீட்டுக்குச் செல்ல மூன்றரை மணி நேரம் ஆனது' என கூறி உள்ளார்.
ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் கூறுகையில், 'மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 3 கி.மீ., துாரத்தை கடக்க கூட, ஐந்து மணி நேரம் ஆனது' என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெங்களூரு நகரில் சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை. அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளன. சில தினங்களுக்கு முன்பு, கண்துடைப்புக்காக சாலைப் பள்ளங்களை மூடப்பட்டன.
இப்போது மீண்டும் பள்ளம் விழ ஆரம்பித்துள்ளன. இந்த பள்ளங்களை எப்போது மூடுவர் என்றே தெரியவில்லை.
போக்குவரத்து நெரிசலை பார்க்கும்போது, வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்து விடலாம் போல் தோன்றுகிறது என, பெங்களூரு நகரவாசிகள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நேற்றும் மாலை 4:00 மணிக்கு நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. ரிச்மெண்ட் சதுக்கத்தில் பெய்த கனமழைக்கு, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பாதி அளவு வெள்ளத்தில் மூழ்கின.
கே.ஆர்.புரம் சாய் லே - அவுட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மக்கள் தண்ணீரை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் பெய்த மழையால், மறுபடியும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.