ADDED : பிப் 11, 2025 08:04 PM
புதுடில்லி:தாயின் காதலனைக் கொன்று உடலை பூங்காவில் உள்ள குளத்தில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காஜிபூர் ஸ்மிருதிவன் பூங்கா குளத்தில் நேற்று முன் தினம் மாலை, ஆண் சடலம் மிதந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மீட்கப்பட்ட உடல், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் சிங் பிஷ்த்,24, என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.
காஜிபூர் போலீசார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சிறப்புப் படை போலீசார் மற்றும் ஏ.ஏ.டி.எஸ்., ஆகிய நான்கு படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அந்தப் பகுதியில் இயங்கிய மொபைல் போன் எண்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
குளத்தில் இறந்து கிடந்த ராகுல் சிங்குக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, ராகுல் மது போதையில் அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்தப் பெண், ராகுலை அவரது வீட்டில் இறக்கிவிடுமாறு தன் மகனுடன் அனுப்பி வைத்துள்ளார்.
ஏற்கனவே தன் தாயின் செயலால் விரக்தியிலும், கடும் ஆத்திரத்திலும் இருந்த அந்தப் பெண்ணின் மகன், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஸ்மிருதிவன் பூங்காவில் செங்கல்லால் ராகுலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ராகுல் அதே இடத்திலேயே உயிரிழந்தார். ராகுல் உடல் மற்றும் அவரைக் கொல்ல பயன்படுத்திய செங்கல் ஆகியவற்றை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். வெளியூர் தப்பிச் செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

