ADDED : பிப் 13, 2025 02:32 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் அரசு பள்ளியில், குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப் பள்ளியில், நேற்று காலை பள்ளி வளாகத்தில், மாணவர்கள் குடிநீர் குழாயில் கை கழுவச் சென்றனர். அப்போது, குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து,
மாணவர்கள் மீது விழுந்தது. இதில், மாணவி தர்ஷிகா, 10, மாணவர்கள் பவின், 8, பவன்குமார், 8, ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ''குடிநீர் குழாய் பொருத்திய சுவர் பழமையானது என்பதால் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து, விசாரணை நடத்தப்படும். தற்காலிகமாக வகுப்புகளை வேறு இடத்திற்கு மாற்றி, பள்ளி கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.