3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஜம்முவில் பாதுகாப்பு படை அதிரடி: பஹல்காம் தாக்குதலுக்கு உதவியவர்களா?
3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஜம்முவில் பாதுகாப்பு படை அதிரடி: பஹல்காம் தாக்குதலுக்கு உதவியவர்களா?
ADDED : மே 16, 2025 12:17 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் - இ - தொய்பாவின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி ஜம்மு - காஷ்மீர் முழுதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா நகரை ஒட்டிய டிரால் பகுதியின் நதுல் கிராமத்தில் பயங்கரவாதிகள் மூவர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகளும் திருப்பிச் சுட்டனர். பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்கு பின், பயங்கரவாதிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்கள், ஆசிப் அஹமது ஷேக், அமீர் நசீர் வானி, யாவர் அஹமது பட் என்றும், அவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முஹமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த 13ம் தேதி சோபியான் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு என்கவுன்டர் சம்பவங்களின் போதும், ஏராளமான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உதவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.