3 வழியில் பிரிந்த ஓட்டுகள்; ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி மிஸ் ஆன காரணம் இதுதான்!
3 வழியில் பிரிந்த ஓட்டுகள்; ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி மிஸ் ஆன காரணம் இதுதான்!
ADDED : நவ 25, 2024 09:19 AM

ராஞ்சி: ஜார்க்கண்டில் பா.ஜ., தோல்விக்கு, ஜெயராம் மஹாதோ கட்சியினர் போட்டியால் ஓட்டுக்கள் மூன்றாகப் பிரிந்தது தான் காரணம் என்று கருதப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இங்கு 21 தொகுதிகளில் பா.ஜ., தனித்து வெற்றி பெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெறவில்லை. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மட்டும் தனித்து 34 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சிகளும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று கை கொடுத்தது.
அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் இணைந்து, ஜார்கண்ட் மாணவர் சங்கம் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மறுபுறம், ஜார்க்கண்ட் லோக் தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி தலைவர் ஜெய்ராம் மஹதோ, 71 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது பா.ஜ., தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பிரித்து விட்டனர்.
ஜார்க்கண்ட் டைகர் என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் ஜெய்ராம் மஹாதோ, மாநிலத்தில் குர்மி சமூகத்தினரின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். இவர், டும்ரி தொகுதியில் 94,496 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். வேறு எங்கும் வெற்றி பெற விட்டாலும், ஒவ்வொரு தொகுதிகளும் அந்த சமூகத்தினரின் ஓட்டுக்களை கணிசமாக பிரித்து விட்டார்.
மாநிலத்தில், 10-12% வாக்காளர்களைக் கொண்ட குர்மி சமூகம் ஜெய்ராமுக்கு ஓட்டு அளித்திருப்பது எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது. இது தான் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி கட்சிக்கு வெற்றிக்கு வழி வகுத்துள்ளதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.