ADDED : ஜன 21, 2025 07:12 AM
மாண்டியா: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 30 க்கும் மேற்பட்ட பயணியர் காயம் அடைந்தனர்.
சாம்ராஜ்நகர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பயணியரை ஏற்றி கொண்டு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி வந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்தனர். மாண்டியா, மத்துார் தாலுகா ருத்ராக் ஷிபுரா பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சை திருப்ப டிரைவர் முயற்சித்து உள்ளார்.
ஆனால், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சாலை தடுப்பில் மோதியது. இதனால் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட பஸ்சில் இருந்த 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமும், மூன்று பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
இதை பார்த்த வாகன ஓட்டிகள், போலீசார், மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். பின், பாதிக்கப்படவர்கள் அனைவரும் மடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட கலெக்டர் குமார், ஜில்லா பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ஷேக் தன்வீர் ஆசிப், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் மோகன், கே.எஸ்.ஆர்.டி.சி., மாவட்ட கட்டுப்பாட்டாளர் நாகாராஜு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
'தீவிர சிகிச்சையில் உள்ள மூவரையும் மேல் சிகிச்சைக்காக மாண்டியாவில் உள்ள மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும், செலவை கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர் குமார் உத்தரவிட்டார்.