பிரம்மோற்சவத்தின் போது 30 லட்சம் திருப்பதி லட்டு பிரசாதங்கள் விற்பனை: தேவஸ்தானம் தந்த 'அப்டேட்'
பிரம்மோற்சவத்தின் போது 30 லட்சம் திருப்பதி லட்டு பிரசாதங்கள் விற்பனை: தேவஸ்தானம் தந்த 'அப்டேட்'
UPDATED : அக் 13, 2024 09:37 AM
ADDED : அக் 13, 2024 07:58 AM

திருப்பதி: திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில், 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ம் தேதி துவங்கி, நேற்று (அக்.,12) வரை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மலையப்ப சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டனர். கடைசி நாள், கருடசேவை தரிசனத்தை காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ.50க்கும் விற்கப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானது. கடந்த ஆண்டிலும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரூ.26 கோடி
உண்டியல் வசூல் ரூ.26 கோடி. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி அதிகம் வசூலானது. இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.