30 நக்சல்கள் பலி! சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் அதிரடி இந்தாண்டில் மட்டும் 113 பேர் காலி
30 நக்சல்கள் பலி! சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் அதிரடி இந்தாண்டில் மட்டும் 113 பேர் காலி
ADDED : மார் 20, 2025 11:54 PM

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
நக்சலைட் ஆதிக்கம் உள்ள இம்மாநிலத்தில், 'பாஸ்டர் டிவிஷன்' எனப்படும் பிஜப்பூர், தண்டேவாடா, கன்கெர், நாராயணன்புர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் வனப்பகுதிகளுக்குள், ஏராளமான நக்சலைட்டுகள் பதுங்கி இருந்தபடி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
வரும் 2026 மார்ச்சுக்குள், நக்சலைட்டுகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், சரணடைந்து திருந்தி வாழ முன்வருவோருக்கு தேவையான வசதிகளை மாநில அரசுடன் சேர்ந்து செய்து தருகிறது.
தொடர் தாக்குதல்
இதன்படி, கடந்த வாரம் பிஜப்பூர் மாவட்டத்தில் 17 நக்சலைட்கள் சரணடைந்தனர். எனினும், பலர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பிஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காலை 7:00 மணிக்கு சிறப்பு அதிரடிப்படை, டி.ஆர்.ஜி., எனப்படும் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின் கூட்டு படையினர், அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
உடனே, பாதுகாப்பு படை வீரர்களும் நக்சலைட்டுகள் மீது திருப்பி தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில், தாக்குப்பிடிக்க முடியாமல் சில நக்சலைட்டுகள் அடர்ந்த காட்டுக்குள் ஓடி விட்டனர். அதன்பின், அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தபோது, 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு கிடந்தனர்.
தீவிர நடவடிக்கை
மேலும், ஏராளமான துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை சிக்கின. இந்த மோதலில், டி.ஆர்.ஜி., படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, சத்தீஸ்கரின் கன்கெர், நாராயண்பூர் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியிலும், நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.
அங்கு, எல்லை பாதுகாப்பு படை மற்றும் டி.ஆர்.ஜி., படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்ட நேரமாக நீடித்த இந்த சண்டையில், நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் ஏராளமான தானியங்கி துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் கிடந்தன. சத்தீஸ்கரில் இரண்டு இடங்களில் நேற்று ஒரே நாளில், 30 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே, பிஜப்பூரின் இந்திராவதி தேசிய பூங்கா அருகே, கடந்த மாதம் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், நேற்றும் 30 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 113 நக்சலைட் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.