மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி... 30 பேர் பலி!
மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி... 30 பேர் பலி!
ADDED : ஜன 30, 2025 02:38 AM

பிரயாக்ராஜ், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவின் முக்கிய நாளான நேற்று புனித நீராடுவதற்காக, 10 கோடி பேர் குவிந்தனர். புனித நீராடல் துவங்குவதற்கு முன், திரிவேணி சங்கமத்தை நோக்கி மக்கள் திடீரென முன்னேற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 30 பேர் உயிரிழந்ததாகவும்; 60 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நிகழ்ச்சிகள் கடந்த 13ம் தேதி துவங்கின. அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடக்க உள்ள இந்த ஆன்மிக நிகழ்ச்சியில், 40 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
புனித நீராடல்
கும்பமேளாவின் முக்கிய நாட்களில் ஒன்றான, மவுனி அமாவாசையான நேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக அதிகளவில் மக்கள் கூடியிருந்தனர். அரசின் தகவலின்படி, 10 கோடி பேர் நேற்று ஒரே நாளில் மஹா கும்பமேளா நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர்.
வழக்கமாக, இது போன்ற முக்கிய நாட்களில், அகாரா எனப்படும் மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் முதலில் புனித நீராடுவர். இவர்களுடன் நாகா சாதுக்களும் பேரணியாக வந்து புனித நீராடுவர். அதன்பிறகே, பக்தர்களுக்கு புனித நீராட வாய்ப்பு அளிக்கப்படும்.
அதன்படி, நேற்று அதிகாலையில் 13 அகாராக்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் வரிசையின்படி புனித நீராடுவதற்காக காத்திருந்தனர். அதற்கு முன், அதிகாலை 1:00 மணியில் இருந்து 2:00 மணிக்குள், அதிகளவில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக திரிவேணி சங்கமம் அருகே குவிந்தனர்.
கும்பமேளா நடக்கும் பகுதியில் பல இடங்களில், புனித நீராடுவதற்காக படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திரிவேணி சங்கமத்தில் குளிப்பதற்காக மக்கள் குவிந்திருந்தனர்.
ஒரு கட்டத்தில், தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து பலரும் முண்டியடித்து முன்னேற முயன்றனர். அப்போது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில மணி நேரம் அங்கு குழப்பமான சூழல் நிலவியது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உள்ளிட்டோர், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். சில மணி நேரத்துக்குப் பின், நிலைமை சீரடைந்தது.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், புனித நீராடலை ஒத்தி வைப்பதாக அகாராக்கள் தெரிவித்தனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கையை ஏற்று அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர். மதியத்துக்குப் பின், நிலைமை சீரடைந்ததும், நாகா சாதுக்கள் புடைசூழ, அகாராக்களைச் சேர்ந்தவர்கள் புனித நீராடினர்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக குவியாமல், படித்துறைகளில் நீராடும்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத் யாத்ரீகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே, கூட்ட நெரிசலில் 35 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் நேற்று காலை தெரிவித்தார். நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலையில் மட்டும் நான்கு முறை தொலைபேசி வாயிலாக அவருடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்த பின், எங்கு பார்த்தாலும் மக்களின் பைகள், உடைமைகள், துணிகள், காலணிகள் என சிதறிக் கிடந்தன.
ரூ.25 லட்சம் இழப்பீடு
இது ஒரு பக்கம் இருக்க, 'கூட்ட நெரிசலில் சில உயிர்பலி ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது' என, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
காயமடைந்தவர்களுக்கு உ.பி., அரசு நிர்வாகம் தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். ஆனால், உயிர்பலி தொடர்பாக, உ.பி., அரசு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தது.
கும்பமேளாவுக்கான டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா நேற்று மாலையில் அளித்த பேட்டியில், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
''அகாராக்கள் செல்ல வேண்டிய பாதையில் பக்தர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால், தடுப்புகள் தகர்க்கப்பட்டு, மக்கள் வெளியேற முயன்றனர்.
''புனித நீராடுவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நினைத்து மக்கள் முன்னேற முயன்றனர். இதுவே, கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாயிற்று,'' என, டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா கூறினார்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிய உ.பி., அரசு விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
Maha Kumbh Mela 2025