ADDED : ஜூன் 15, 2025 12:13 AM
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி -- கூகி இனத்தவரிடையே 2023ல் ஏற்பட்ட கலவரத்தில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசின் முயற்சியால் அங்கு இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில், இம்பால் கிழக்கு, மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தவ்பால் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெருமளவில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் போலீசார், மத்திய ஆயுதப்படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 151 எஸ்.எல்.ஆர்., துப்பாக்கிகள், 65 இன்சாஸ் துப்பாக்கிகள், 12 இலகுரக இயந்திர துப்பாக்கிகள், 6 ஏ.கே., ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 328 துப்பாக்கிகள் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.