ADDED : டிச 18, 2024 10:25 PM
பேகூர் ; சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர், சட்டசபைத் தேர்தலில் ஓட்டளித்த விஷயம், மாநிலம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பேகூர் பகுதியில் ஒரு நபர், சாலையில் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சந்தேகப்படும் வகையில், குப்பைத் தொட்டி அருகே ஒருவர் காணப்பட்டார்.
அந்நபரிடம் பேகூர் நபர் பேச்சுக் கொடுத்தார். அப்போது அவர், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி, பல திடுக்கிடும் விஷயங்களை கூறியுள்ளார்.
இதை தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்த பேகூர் நபர், இணையத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் வங்கதேசத்தை சேர்ந்த நபர் கூறியிருப்பதாவது:
என் பெயர் ஷாதுார். நான் வங்கதேசத்தைச் சேர்ந்தவன். அங்கிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்துள்ளேன். இங்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பேகூரில், சலீம் என்பவரிடம் வேலை செய்கிறேன்.
எங்கள் நாட்டை சேர்ந்த 3,000 பேர் இங்கு வசிக்கிறோம். எங்களிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதை வைத்து, நான் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'சட்டவிரோதமாக வசிக்கிறேன்' என்பதை ஜாலியாகவும், எந்த ஒரு பயமும் இன்றியும் அவர் கூறுகிறார். இது மாநிலம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பயமின்றி அவர் பேசுவதை கேட்டு, வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.