ADDED : அக் 16, 2024 02:34 AM

புதுடில்லி, நம் முப்படைகளின் கண்காணிப்பு மற்றும் போர் திறனை மேம்படுத்தும் விதமாக, அதிக திறன் படைத்த, 'எம்.க்யூ., - 9பி பிரிடேட்டர்' ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் டில்லியில் நேற்று கையெழுத்தானது. மொத்தம், ரூ.33,000 கோடி செலவில், 31 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.
அமெரிக்க ராணுவ கண்காணிப்பு பணிகளில் முக்கிய பங்கு வகிப்பவை, எம்.க்யூ., - 9பி பிரிடேட்டர் ட்ரோன்கள். இந்த வகை ட்ரோன்களை அமெரிக்க அரசிடம் இருந்து வாங்க, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நம் ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையிலான, ராணுவத்துக்கான அமைச்சரவை குழு, இந்த ட்ரோன்களை வாங்க கடந்த வார கூட்டத்தில் பச்சை கொடி காட்டியது.
இதை தொடர்ந்து, நம் முப்படைகளுக்கு 31 எம்.க்யூ., - 9பி பிரிடேட்டர் ட்ரோன்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் டில்லியில் நேற்று கையெழுத்தானது.
இந்த ட்ரோன்களை தயாரிக்கும் அமெரிக்காவை சேர்ந்த, 'ஜெனரல் அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொத்தம், 33,000 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் 31 ட்ரோன்களில், 15 நம் கடற்படைக்கும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா எட்டு ட்ரோன்களும் வழங்கப்பட உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஜூலையில், ஆப்கானிஸ்தானின் காபூலில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அய்மன் அல்ஜவாஹிரியை சுட்டு வீழ்த்திய எம்.க்யூ., - 9 ரீப்பர் வகை ட்ரோன்களின் அடுத்த வடிவம் தான், இந்த எம்.க்யூ., - 9பி பிரிடேட்டர் ட்ரோன்கள்.
இது, 40,000 அடி உயரத்தில், 40 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் உடையது. ஏவுகணைகளை சுமந்து செல்வதுடன் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 450 கிலோ வெடி பொருட்கள் உட்பட, 2,155 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது.
எல்லைகளை கண்காணித்தல், கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு, எதிரி இலக்குகளை தாக்குவது உட்பட நம் முப்படைகளின் போர் திறனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் திறன் படைத்தவை இந்த ட்ரோன்கள்.
தானியங்கி முறையில் புறப்படவும், தரையிறங்கவும் கூடிய இந்த ட்ரோன்களை சிவில் விமான சேவையில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்க முடியும்.