"கறுப்பு பணத்தை அரசு மீட்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்'
"கறுப்பு பணத்தை அரசு மீட்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்'
ADDED : செப் 28, 2011 09:56 PM

''அன்னிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது, முட்டாள்தனமானது,'' என, யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 10 ஆயிரம் கி.மீ., தூர, 'சுவாபிமான் யாத்திரை'யை, யோகா குரு ராம்தேவ், கடந்த, 20ம் தேதி, உ.பி., மாநிலம் ஜான்சியில் துவக்கினார்.
தற்போது, உன்னாவோ சென்றடைந்துள்ள அவர், அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டை கொள்ளை அடிக்கிறது. பெரும் ஊழலிலும் ஈடுபடுகிறது. இந்த அரசு, ஊழலை முடிவுக்கு கொண்டு வரும், அன்னிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நாட்டை கொள்ளை அடிக்க காங்கிரசே காரணம். அதனால் தான், அந்த அரசுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்ட முற்பட்டுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியினர் இனி, லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும் செல்லாமல் மக்கள் தடுக்க வேண்டும். தேர்தல்களில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். நாட்டை காப்பாற்ற யார் முன்வருகின்றனரோ, அவர்களுக்கு தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.