ADDED : செப் 21, 2011 12:14 AM

திருவனந்தபுரம்:'கோககோலா நிறுவனம், கிராம மக்களுக்கு அளிக்கவேண்டிய நஷ்ட ஈடு தொகை குறித்து ஆராய சிறப்பு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து, மத்திய அரசு கோரி உள்ள விளக்கங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.இதுகுறித்து நேற்று முதல்வர் உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ' கோக கோலா நிறுவனம் அளிக்கவேண்டிய நஷ்டஈடு தொகை குறித்து அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு தீர்ப்பாயம் குறித்து மத்திய அரசு, மாநில அரசிடம் சில விளக்கங்களை கோரி உள்ளது.
அவற்றிற்கு உரிய பதில் அளிக்கப்படும்.
இதுபோன்ற மத்திய அரசின் செய்கை, மாநில சட்டசபையை அவமானப்படுத்துவதாக நான் கருதவில்லை. கடந்த இடதுசாரி முன்னணி ஆட்சியின்போது சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுவது சரியல்ல' என்றார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சிமடா பகுதியில், இந்துஸ்தான் கோககோலா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம், அப்பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமான நீர்வளத்தை பெருமளவு சுரண்டி விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாநில அரசு, கமிட்டி அமைத்து ஆய்வு செய்தது. அக்கமிட்டி, அரசுக்கு அளித்த அறிக்கையின்படி, இந்துஸ்தான் கோககோலா நிறுவனம், அக்கிராம மக்களுக்கு ரூ.216 கோடியே 16 லட்சம் நஷ்டஈடாக வழங்கவேண்டும் என குறிப்பிட்டது.இதுகுறித்து ஆராயவும், நஷ்டஈடு தொகை குறித்து முடிவு செய்யவும் சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க, பிப்ரவரி மாதம் கேரள சட்டசபையில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது. இதுகுறித்து மாநில அரசிடம், மத்திய அரசு மேலும் பல விளக்கங்களை கேட்டு இருந்தது.