மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது: எஸ்ஐஆர் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது: எஸ்ஐஆர் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
UPDATED : டிச 09, 2025 04:08 PM
ADDED : டிச 09, 2025 03:33 PM

புதுடில்லி: '' மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது,'' என எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பை கோரும் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள்(எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் காலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி சனாதனி சங்சத் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்ஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு பதில் வேறு சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், விஷயம் தீவிரமானதாக மாறிவிடும் என்றனர்.
நீதிபதி ஜாய்மாலா பக்ஷி: இந்த மனு அரசியல் ரீதியில் தொடரப்பட்டதா அல்லது, அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து உண்மையில் கவலை கொண்டு தாக்கல் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விவி கிரி: 2022- 23 காலத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டியதுடன், சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மேற்க்கோள் காட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
நீதிபதி ஜாய்மாலா பக்ஷி: ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் நடக்கவில்லை. மற்றது அனைத்தும் வரலாற்று குறிப்புகளாக உள்ளன.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: போலீசாரை பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தாமல் பிரச்னையை சரி செய்ய முடியாது. சமீபத்தில் தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
தலைமை நீதிபதி: சட்டம் ஒழுங்கு பிரச்னையை யாரோ ஒருவர் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது
ஜாய்மாலா பக்ஷி: கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில அரசிடம் மனு அளிக்கலாம். அப்படி நடக்காவிட்டால், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே வழக்குப்பதிவு, மேற்கு வங்கத்துக்கு மட்டும் பொருந்தும் எனக்கூற முடியுமா?
தலைமை நீதிபதி: மாநிலத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், மத்தியபடை பாதுகாப்பு கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

