அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது
அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது
UPDATED : ஜன 15, 2024 03:02 PM
ADDED : ஜன 15, 2024 02:58 PM

புதுடில்லி: ''அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார்.
வரும் 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையியல் காங்கிரசில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்தது.
இது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ''ராமரை நேசிப்பவர்கள் அழைப்பிதழ் கிடைத்த உடன் கண்டிப்பாக வருவார்கள்'' எனக் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சி துணை தலைவருமான பிரமோத் திவாரி கூறுகையில், ''அழைப்பிதழ் வழங்க இவர்கள் யார்? ஒட்டுமொத்த காங்கிரசும் அயோத்திக்கு அழைப்பின்றி செல்லும். அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்'' என்றார்.