இந்தியாவின் எந்த பகுதியையும் பாக்., என கூறக்கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் 'அட்வைஸ்'
இந்தியாவின் எந்த பகுதியையும் பாக்., என கூறக்கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் 'அட்வைஸ்'
ADDED : செப் 25, 2024 12:38 PM

புதுடில்லி: 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது' என்று கர்நாடகா நீதிபதிக்கு , சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார்.
அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி, வேதவியாசாச்சர் ஸ்ரீஷானந்தா விசாரித்தார். அப்போது அவர், பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி ஸ்ரீஷானந்தாவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் கண்டித்தார். இன்று(செப்.,25) சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது கர்நாடகா நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது. நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் மற்றும் அவதூறு கருத்துகளை கூறக்கூடாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார்.