லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது ஏன்? ராஜ்யசபாவிற்கு தாவிய சோனியா விளக்கம்
லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது ஏன்? ராஜ்யசபாவிற்கு தாவிய சோனியா விளக்கம்
ADDED : பிப் 15, 2024 01:13 PM

புதுடில்லி: ‛‛ வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை '' என, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா விளக்கம் அளித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின், 1999ல் முதல் முறையாக லோக்சபா தேர்தலில், சோனியா வென்றார். கடந்த 2004 வரை உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும், 2004ல் இருந்து உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் தொடர்ந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, 77 வயதாகும் சோனியா, கடந்த லோக்சபா தேர்தலின்போதே, இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி வந்தார். இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில், ராஜஸ்தானில் இருந்து அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், உங்களுக்கு என்னால் நேரடியாக சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால், நிச்சயம் எனது மனம் உங்களையே சுற்றி வரும்.
ரேபரேலி உடனான எனது உறவு பழமையானது. எனது குடும்பத்தினரின் உறவு இன்னும் ஆழமானது. சுதந்திரத்திற்கு பிறகு அங்கு நடந்த தேர்தலில் எனது மாமனார் பெரோஷ் காந்தியை வெற்றி பெற செய்து டில்லி அனுப்பி வைத்தீர்கள். அவருக்கு பிறகு எனது மாமியார் இந்திராவை தேர்வு செய்தீர்கள். அன்றில் இருந்து எங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், கடினமான பாதைகள் அனைத்திலும் உங்களின் அன்பும், உற்சாகமும் தொடர்கிறது. எது எங்களின் நம்பிக்கையை வலுவாக்கி உள்ளது. இவ்வாறு சோனியா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

