சோதனைக்கு மம்தா பானர்ஜி இடையூறு: சுப்ரீம் கோர்ட் கோபம்
சோதனைக்கு மம்தா பானர்ஜி இடையூறு: சுப்ரீம் கோர்ட் கோபம்
ADDED : மார் 18, 2026 06:33 PM

புதுடில்லி: மத்திய அமைப்பின் விசாரணையின் போது வேறு மாநில முதல்வர்கள் திடீரென வந்தால், அமலாக்கத்துறை எதுவும் செய்ய முடியாமல் விட்டு விடலாமா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
வழக்கு
நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகள் குறித்து மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஐபேக் நிறுவனத்தில் ஜனவரி 8 ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை நிர்வகித்து வருகிறது.
இதனால், சோதனை நடந்து கொண்டிருந்தபோது ஐபேக் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி, லேப்டாப், மொபைல்போன் மற்றும் சில ஆவணங்களை எடுத்து சென்றார். இதனையடுத்து அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரசாத் குமார் மிஸ்ரா, என்வி அஞ்சாரியா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷிவம் திவான் வாதாடுகையில், மத்திய அரசின் ஒரு துறையை மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. சிபிஐ, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றுக்கு மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடரும் அதிகாரம் இல்லை. மாநில விசாரணை அமைப்புகளான சிஐடி, லஞ்ச ஒழிப்பு பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவுக்கும் அந்த அதிகாரம் கிடையாது என வாதிட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையினரின் புகாரின்படி, மத்திய அரசு நிர்வகிக்கும் அலுவலகத்துக்குள் முதல்வர் திடீரென உள்ளே புகுந்துள்ளார் என்றால் யார் முடிவு எடுப்பார்கள். நாளை வேறொரு அலுவலகத்துக்குள் வேறு முதல்வர் திடீரென உள்ளே நுழைவார். அப்போதும் அமலாக்கத்துறைக்கு நிவாரணம் கிடைக்காமல் இருக்கலாமா? என்றார்.
ஆபத்து
அப்போது வழக்கறிஞர் திவான் கூறுகையில், இதற்கு அரசியலமைப்பு தீர்வு ஒன்றை வழஙகி உள்ளது. விசாரணை அமைப்பு தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்காமல் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். அமைப்புகளை வழக்கு தொடர செய்து, நீதிமன்றங்களை நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாக்கினால், கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.
நீதிபதிகள் கோபம்
இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என திவன் கூறினார். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளில் பல புதிய விஷயங்கள் உள்ளதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் மேனகா குருசாமி, புதிய குற்றச்சாட்டுகள் உள்ளதால் பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார்.
நீதிபதிகள், கூறுகையில், பதில் மனு 10 நாட்களுக்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், விசாரணை தொடரும். குறிப்பிட்ட வழக்கில் எப்போது விசாரணை நடக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு யாரும் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தார்.

