"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி
"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி
UPDATED : ஜூன் 25, 2024 02:08 PM
ADDED : ஜூன் 25, 2024 10:41 AM

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை' என பிரதமர் மோடி கூறினார்.
1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தான் இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு: எமர்ஜென்சியை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய, எமர்ஜென்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி அவர்கள் அடியோடு தகர்த்தனர் என்பதை நினைவூட்டுகிறது.
கூட்டாட்சி
எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு நமது அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை.கூட்டாட்சி முறையை அழித்தவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர்கள் இவர்கள் தான்.எமர்ஜென்சியை அமுல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை அவர்களின் கட்சியினரிடையே உயிர்ப்புடன் இருக்கிறது.
சித்திரவதை
ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகக் கொள்கையை புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.