''ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது'': பா.ஜ., செய்தி தொடர்பாளர்
''ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது'': பா.ஜ., செய்தி தொடர்பாளர்
ADDED : ஜன 30, 2024 11:09 AM

புதுடில்லி: இண்டியா கூட்டணியை சேர்ந்த சில கட்சி தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வரும் நிலையில், 'ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது' என பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சித்துள்ளார்.
இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆம்ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமலாக்கத்துறை பிடியில் உள்ளனர். இதில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டில்லி சென்ற அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது அவர் டில்லி இல்லத்தில் இல்லாமல் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
அதேபோல் ஆம்ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார்.
இது தொடர்பாக பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், ''ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது. ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவாகிவிட்டார், ஆஜராகி அமலாக்கத்துறை கேள்விக்கு பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையையே கேள்வி எழுப்புகிறார். திரிணமுல் காங்., தலைவர் ஷேக் ஷாஜகான் மத்திய அரசு அதிகாரிகளை தாக்குகிறார்'' என விமர்சித்துள்ளார்.