எதிரிகளுடன் கைகோர்ப்பதா? ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி
எதிரிகளுடன் கைகோர்ப்பதா? ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி
ADDED : செப் 12, 2024 05:21 PM

புதுடில்லி: '' அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்திற்குரியது '', என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகள் இங்கு எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா குழு ஒன்றின் கூட்டத்தில் ஜக்தீப் தன்கர் கூறியதாவது: நாட்டிற்கு சுதந்திரம் பெறவும், அதனை பாதுகாக்கவும், அதனையும், நாட்டையும் பாதுகாக்க பலர் உயர்ந்த தியாகம் செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். நமது சகோதரர், சகோதரிகள் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தாய்மார்கள் தங்களது மகன்களையும், மனைவிகள் கணவன்களையும் இழந்துள்ளனர். நமது தேசப்பற்றை கேலி செய்யக்கூடாது.வெளிநாட்டிற்கு செல்லும் ஒவ்வொரு இந்தியரும், நமது நாட்டின் தூதராக மாற வேண்டும். அரசியல் சாசன பதவியில் உள்ள ஒருவர், இதற்கு எதிர்மாறாக செயல்படுவது வேதனை அளிக்கிறது.
நமது நாட்டின் எதிரிகளுடன் சேர்வது கண்டனத்திற்குரியது. சகிக்க முடியாதது. வெறுக்கத்தக்கது. அவர்களுக்கு நாட்டின் மாண்பு பற்றி தெரியவில்லை. 5 ஆயிரம் ஆண்டு பழமையான கலாசாரம் கொண்டது இந்தியா என தெரியவில்லை. பாரதம், அரசியல் சாசனம் மற்றும் தேசிய நலன் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. இதனை பார்த்து மக்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

