"தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடாதீங்க": பெற்றோருக்கு பிரதமர் மோடி "அட்வைஸ்"
"தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடாதீங்க": பெற்றோருக்கு பிரதமர் மோடி "அட்வைஸ்"
UPDATED : ஜன 29, 2024 01:57 PM
ADDED : ஜன 29, 2024 12:58 PM

புதுடில்லி: ‛‛தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடக்கூடாது. அது அவர்களின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும்'' என பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
தேர்வு நேரத்தில் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி எதிர்கொள்வது குறித்து, டில்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்து உரையாடினார். தேர்வு நெருங்கும் நேரத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபங்கேற்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
விசிட்டிங் கார்டு
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒரு போதும் ஒப்பிடக்கூடாது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் அட்டையை விசிட்டிங் கார்டாக கருதுகின்றனர். வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும்.
உறவு முறை
ஆசிரியர்கள் தங்கள் வேலையை வெறும் வேலையாக எடுத்துக்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்களிடம் வெளிப்படையாக விவாதிக்கும் வகையில் உறவு முறை இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களை பிரச்னைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மாணவர்கள் எழுச்சி பெறுவார்கள்.
முக்கிய பங்கு
தேர்வு குறித்த மன அழுத்தத்தை மாணவர்கள், அவரது குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாகக் கையாள வேண்டும். வாழ்க்கையில் சவாலும் போட்டியும் இல்லாவிட்டால், வாழ்க்கை உற்சாகமாக இருக்காது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருக்க வேண்டும்.
மன உறுதி
பிறர் கூறும் குறைகளை வைத்து, தன் குழந்தைகள் குறித்து தவறாக நினைக்காதீர்கள். அது அவர்களின் மன நலனைப் பாதிக்கிறது. அது நல்லதை விட தீமையே அதிகம் செய்கிறது. இது மாணவர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். மாணவர்களுடன் சரியான உரையாடல் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.