"அடுத்தடுத்து அமலாக்கத்துறை சம்மன்": ‛கெஜ்ரிவால் பதிலும், பா.ஜ., கேள்வியும்'!
"அடுத்தடுத்து அமலாக்கத்துறை சம்மன்": ‛கெஜ்ரிவால் பதிலும், பா.ஜ., கேள்வியும்'!
UPDATED : மார் 04, 2024 10:24 AM
ADDED : மார் 04, 2024 10:23 AM

புதுடில்லி: 'மதுபான கொள்கை வழக்கில், அனுப்பி வரும் சம்மனுக்கு, மார்ச் 12ம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக ஆஜர் ஆகி விளக்கம் அளிப்பேன்' என அமலாக்கத்துறைக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு, ‛‛சம்மன் அனுப்பியதில் இருந்து, எதற்கு கெஜ்ரிவால் சாக்குபோக்கு சொல்கிறார்?' என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
கெஜ்ரிவால் பதில்
மதுபான கொள்கை வழக்கில், 8வது முறையாக கெஜ்ரிவாலுக்கு இன்று(மார்ச் 04) ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், மார்ச் 12க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். காணொளி மூலம் ஆஜர் ஆகுவேன். எனக்கு அனுப்பி வரும் சம்மன் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ., கேள்வி
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவலா கூறியதாவது: ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் அவர் எப்போது எப்படி ஆஜர் ஆகுவேன் என்று தீர்மானிப்பது முற்றிலும் அபத்தமானது.
சம்மன் அனுப்பியதில் இருந்து, எதற்கு கெஜ்ரிவால் சாக்குபோக்கு சொல்கிறார்?. இது பழிவாங்கும் அரசியல் என்றால், நீதிமன்றம் ஏன் சம்மனை ரத்து செய்யவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார். அவர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

