"எனக்கு கூட தான் 5 குழந்தைகள் இருக்கு": பிரதமருக்கு கார்கே பதில்
"எனக்கு கூட தான் 5 குழந்தைகள் இருக்கு": பிரதமருக்கு கார்கே பதில்
ADDED : மே 01, 2024 12:01 PM

புதுடில்லி: இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என பிரதமர் மோடியின் கருத்துக்கு, 'இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் உள்ளனரா?. எனக்கு கூட தான் 5 குழந்தைகள் உண்டு' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினர். அதிக குழந்தை பெற்றவர்கள் மற்றும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
ஒப்பிட முடியாது
இது குறித்து கார்கே கூறியதாவது: நாங்கள் வலுக்கட்டாயமாக வரி விதித்து, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ-யை தவறாகப் பயன்படுத்தி மக்களை சிறையில் அடைத்தோமா?. சோனியா தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் (பா.ஜ.,) இது போன்று ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?. உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தோம்.
நாட்டில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக இதைச் செய்தோம், மேலும் கோடிக்கணக்கானோர் பயனடைந்தனர். நேரு, இந்திரா போன்ற முன்னாள் பிரதமர்களுடன் மோடியை ஒப்பிட முடியாது.
5 குழந்தைகள்
இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் உள்ளனரா?. எனக்கு கூட தான் 5 குழந்தைகள் உண்டு.நாங்கள் பெரும்பான்மை பெறப் போகிறோம். மக்களின் செல்வத்தைத் திருடி, அதிகப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுப்போம் என்கிறார். ஏழைகளுக்கு எப்போதுமே அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வாறு கார்கே கூறினார்.