''எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாங்க...ஒன்னா உழைப்போம்'': பிரதமர் மோடி வலியுறுத்தல்
''எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாங்க...ஒன்னா உழைப்போம்'': பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 22, 2024 01:23 PM
ADDED : ஜூலை 22, 2024 10:49 AM

புதுடில்லி: ''எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) துவங்குகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பார்லி.,யின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வளர்ச்சிக்கான பாதையில்..
பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது. '2047ல் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் அமுத காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முன்னேறிய பொருளாதாரம் கண்ட நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு தொடர்ந்து நடைபோடும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது.
ஒற்றுமை
மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். 2029ல் தேர்தல் நடக்கும் போது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தலாம். தற்போது மக்கள் நலனே முக்கியம். தேர்தலில் பிரசாரம், போட்டியிட்ட நிகழ்வு எல்லாம் முடிந்து விட்டது; இனி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராட வேண்டும். கட்சி வித்தியாசங்களை கடந்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.
தோல்வியால் மனக்கசப்பு
தங்களது ஏமாற்றதால் சிலர் பார்லி., நேரத்தை வீணடிக்கின்றனர். பார்லி.,யில் அரசியல் தொடர்பான பேச்சுகளை தேர்தலின்போது வைத்துக்கொள்ளலாம். அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஏமாற்றம் காரணமாக எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பார்லி.,யின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.