பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் தூதர்: மத்திய அரசு கடும் எதிர்ப்பு
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் தூதர்: மத்திய அரசு கடும் எதிர்ப்பு
ADDED : ஜன 13, 2024 05:17 PM

புதுடில்லி: பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் ஆக இருப்பவர் ஜேன் மேரியட். இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புர் பகுதிக்கு சென்றதுடன் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர், தனது நாட்டு அதிகாரிகளுடன் கடந்த 10ம் தேதி, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றது ஆட்சேபனைக்குரியது.
இதனை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டு உள்ளது. இந்த அத்துமீறல் குறித்து, டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரிடம் கடுமையான எதிர்ப்பை வெளியுறவுத்துறை செயலாளர் பதிவு செய்துள்ளார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இது எப்போதும் நீடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.