‛ நான் முன்னாள் முதல்வர் தான்; மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல ': சிவராஜ் சிங் சவுகான்
‛ நான் முன்னாள் முதல்வர் தான்; மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல ': சிவராஜ் சிங் சவுகான்
ADDED : ஜன 13, 2024 11:09 AM

புனே: ‛‛ நான் முன்னாள் முதல்வர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல'' என ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தற்போது என்னை முன்னாள் முதல்வர் என மக்கள் அழைக்கின்றனர். ஆனால், நான் மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்த ஒருவர் பதவி விலகினால், அவரை விமர்சனத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், நான் பதவியில் இருந்து விலகிய பிறகு எங்கு சென்றாலும் மக்கள் என்னை மாமா என அன்புடன் அழைக்கின்றனர். மக்களின் அன்பே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும், தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை. நான் பதவிக்காக அரசியலில் இல்லை. நான் அராஜகமாக பேச மாட்டேன். 11 தேர்தல்களில் வென்றுள்ளேன். ஆனால், ஒரு தேர்தலில் கூட எனக்காக நான் பிரசாரம் செய்தது கிடையாது. வேட்பு மனு தாக்கலுக்கு முதல் நாள் தான் தொகுதிக்கு செல்வேன். தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டால், மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.