"எனக்கு கவலை இல்லை": லாலுவுக்கு நிதீஷ் குமார் பதில்
"எனக்கு கவலை இல்லை": லாலுவுக்கு நிதீஷ் குமார் பதில்
ADDED : பிப் 17, 2024 03:46 PM

பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் திரும்ப வருவதென்றால், அவருக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும் என லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். இதற்கு “யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை'' என நிதீஷ் குமார் பதில் அளித்துள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திய நிதீஷ் குமார், சமீபத்தில் அதிலிருந்து விலகி பா.ஜ.,வுடன் கைகோர்த்தார். இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கடந்த ஜனவரி 28ல் பீஹாரில் புதிய அரசை அமைத்த நிதீஷ், அதற்கடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்றார்.
'நிதீஷ் குமாருடனான நல்லுறவு தொடருமா' என கேள்விக்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், ''முதலில் அவர் திரும்பி வரட்டும், பின்னர் பார்க்கலாம். அவருக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார். இது குறித்து இன்று நிதீஷ் குமார் அளித்த பதில்: யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அங்கு நிலைமை சரியில்லாததால் நான் அவர்களை விட்டு வெளியேறினேன்.
இருப்பினும், எங்களுக்குள் என்ன பிரச்னை என்று ஆய்வு செய்வோம். அனைவரையும் ஒன்றிணைக்க நான் முடிந்தளவு முயற்சி செய்தேன். ஆனால் அதனை செய்ய என்னால் முடியவில்லை. நான் இப்போது பீஹார் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறேன். எப்போதும் அதைச் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.