''பத்திரப்பதிவு துறையில் ஊழல் '': அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
''பத்திரப்பதிவு துறையில் ஊழல் '': அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 06, 2024 02:33 PM
ADDED : ஜன 06, 2024 02:11 PM

மதுரை: '' பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட வேண்டும்'' இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
இது குறித்து நிருபர்களுக்கு மதுரையில் அண்ணாமலை அளித்த பேட்டி:
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து தேவையில்லாமல் திமுக அரசு தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜன.,8ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறையை நிர்மூலமாக்கியுள்ளது.
எதற்கு எடுத்தாலும் கருணாநிதி பெயர்
ஜல்லிக்கட்டுக்கும் , அலங்காநல்லூருக்கும் சம்மந்தம் இல்லாத பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கருணாநிதி பெயரை வைப்பதை கைவிட வேண்டும்.
எந்த குழந்தை பிறந்தாலும் கருணாநிதி என்று பெயர் வைப்போம். அண்ணாத்துரை என்று பெயர் வைப்போம் என சட்டம் போட்டாலும் போடுவார்கள்.
ஒழித்துக் கட்டணும்
அமைச்சர் மூர்த்தி வந்த பிறகு பத்திரப்பதிவு துறையில் இமாலய அளவில் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவு துறையில் எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர் .பணத்தை வசூலித்து கொடுக்க ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 5 மணிக்கு மேல் கூட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திரப்பதிவுத்துறை பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியுள்ளது. ஒவ்வொரு பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும் மாலை 5மணிக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் கட்டு கட்டாக பணம் கிடைக்கும்.
பா.ஜ., போராட்டம்
இந்த போக்கு மாறாவிட்டால் பா.ஜ., போராட்டம் நடத்தும். திருப்பரங்குன்றத்தில் கடவுள் பெயரில் ஒரு புரோக்கர் இருக்கிறார். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் கிடைக்கும் பணத்தில் தமிழகத்தில் உள்ள பாதியளவு கடனை அடைத்து விடலாம்.
2024ம் ஆண்டு தேர்தல் மோடி என்கிற மனிதருக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளராக மற்றவர்களின் பெயரை கேட்டாலே சிரிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ., வலுவாக இருக்கிறது. மோடியை பிரதமராக்க ஏற்பவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.