"வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு": ராகுல் குற்றச்சாட்டு
"வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு": ராகுல் குற்றச்சாட்டு
ADDED : மார் 03, 2024 03:00 PM

போபால்: 'கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 50 சதவீதம், பழங்குடியினர் எட்டு சதவீதம், தலித் மக்கள் 15 சதவீதம் உள்ளனர். இந்த 73 சதவீதத்தினரில் ஒருவர் கூட பெரிய நிறுவனங்களில் பணிபுரியவில்லை. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் மக்கள் தொகை பற்றி தெரியாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பை எப்படி எதிர்க்க முடியும். இந்த 73 சதவீதத்தினர் குறித்து அறிந்து கொள்ள பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை.
ஏழைகளுக்காக உழைக்கிறேன் என பிரதமர் மோடி கூறி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையின்மை இருமடங்காக உள்ளது. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியதன் மூலம் சிறு தொழில்களை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் பூடானை விட வேலையில்லாத இளைஞர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

