கும்பமேளாவில் ஜாதி வேறுபாடு மறையும்; மோதல் நீங்கும்: பிரதமர் மோடி
கும்பமேளாவில் ஜாதி வேறுபாடு மறையும்; மோதல் நீங்கும்: பிரதமர் மோடி
UPDATED : டிச 13, 2024 10:06 PM
ADDED : டிச 13, 2024 09:12 PM

பிரயாக்ராஜ்: '' கும்பமேளாவில் அனைவரும் ஒன்றாக புனித நீராடுவார்கள். ஜாதி வேறுபாடுகள் மறையும். சமூக மோதல்கள் நீங்கும்,'' என பிரதமர் மோடி பேசினார்.
ஜன.,13 முதல் பிப்., 26 வரை உ.பி.,யின் பிரயாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். முன்னதாக திரிவேணி சங்கமம் பகுதியில் பிரதமர் மோடி, ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார்.
திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கும்பமேளா என்பது ஒற்றுமைக்கான மிகப்பெரிய யாகம். இங்கு அனைத்து விதமான வேறுபாடுகளும் மறைந்து போகின்றன. இந்த கும்பமேளாவில் புனித நீராடும் ஒவ்வொரு இந்தியரும், ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதன் வெளிப்பாடுகளாக இருப்பார்கள்.
மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த புண்ணிய இடத்தில் துறவிகள், ஞானிகள், மகான்கள், படித்தவர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் ஒன்றாக புனித நீராடுவார்கள். ஜாதி வேறுபாடுகள் இங்கு மறையும். சமூக மோதல்கள் நீங்கும்.
கும்பமேளாவை வெற்றிகரமாக மாற்ற இரவு பகலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரயாக் ராஜ் மண்ணில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. கும்பமேளாவை ஏற்பாடு செய்வது என்பது நாட்டின் கலாசார ஆன்மிக அடையாளத்தை புதிய உயரத்தில் நிலைநிறுத்தும்.
மகா கும்பமேளாவை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால், இது உலகம் முழுதும் விவாதிக்கப்படும் ஒற்றுமைக்கான மகா யாகமாக இருக்கும் என்று நான் உறுதியுடன் கூறுகிறேன். இந்நிகழ்ச்சி மகத்தான மற்றும் தெய்வீக வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத போது, கும்பமேளா போன்ற நிகழ்வுகள் பெரிய சமூக மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தன. இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் , சமூகத்திற்கும் ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகின்றன.
முந்தைய அரசுகள், கும்பமேளாவிற்கும், வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் பக்தர்கள் துயரப்பட்டனர். ஆனால், அரசு இது பற்றி கவலைப்படவில்லை.
ஆனால், இன்றைய மத்திய, மாநில அரசுகள் இந்திய கலாசாரத்தை மதிக்கிறது. இதன் மூலம் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்துவதை இரட்டை இன்ஜின் அரசு பொறுப்பாக ஏற்றுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.