அரசின் திட்டங்களால் வேலைக்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்: எல் அண்ட் டி தலைவர் வருத்தம்
அரசின் திட்டங்களால் வேலைக்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்: எல் அண்ட் டி தலைவர் வருத்தம்
UPDATED : பிப் 13, 2025 06:08 AM
ADDED : பிப் 12, 2025 10:19 PM

புதுடில்லி: அரசின் நலத்திட்டங்கள் காரணமாக, தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு வேலை செய்ய வர மறுக்கின்றனர் என லார்சன் & டூப்ரோ( எல் அண்ட் டி) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பெரும்பாலான நிறுவனங்களில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் பணியாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கின்றனர்.
கடந்த மாதம், எஸ்.என். சுப்பிரமணியன் தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் உரையாடிய வீடியோவில் பேசியதாவது: வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நாட்டின் வலுவான பணி நெறிமுறையால் சீனா, அமெரிக்காவை மிஞ்சும். அதுதான் உங்களுக்கான பதில். இவ்வாறு அவர் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று சி.ஐ.ஐ., சார்பில் நடந்த விழாவில் சுப்ரமணியன் பேசியதாவது: வாய்ப்புகளை தேடி தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். அரசின் பல்வேறு திட்டங்களினால்( மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஜன்தன் கணக்குகள், நேரடி மானியம் ஆகியன) உள்ளூர் பொருளாதாரம் நன்றாக இருப்பதால், அவர்கள் வர மறுக்கின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இந்தியாவின் கட்டுமானத்துறையை பாதிக்கும்.
இன்று இந்தியா விசித்திரமான பிரச்னையை எதிர்கொள்கிறது. எல்&டி நிறுவனத்திற்கு 4 லட்சம் தொழிலாளர்கள் தான் தேவை. ஆனால், பலர் பணியை விட்டு விலகி வருவதால் 16 லட்சம் பேரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை அதிகம் ஈர்க்கும் மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், இந்தியாவில் வழங்கப்படுவதை விட 3 முதல் 3.5 மடங்கு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.