"பா.ஜ.,வை பெரும்பான்மை பெற விடாமல் தடுப்போம்": கார்கே நம்பிக்கை
"பா.ஜ.,வை பெரும்பான்மை பெற விடாமல் தடுப்போம்": கார்கே நம்பிக்கை
ADDED : மே 21, 2024 02:52 PM

புதுடில்லி: 'தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் பா.ஜ.,வை வெற்றி பெற விடாமல் தடுப்போம்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கார்கே அளித்த பேட்டி: வெறுப்பையும் பிரிவினையையும் பரப்பும் பா.ஜ.,வுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் நடக்கிறது. தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் பா.ஜ.,வை வெற்றி பெற விடாமல் தடுப்போம். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.
சித்தாந்தம்
நாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். இந்த லோக்சபா தேர்தல் மிகவும் முக்கியமானது. அனைத்து இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் காப்பாற்றுவதாகும். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டு பிரச்னைகள் தலை தூக்கியுள்ளதால் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இரண்டு கோடி வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது போன்ற வாக்குறுதிகளை பா.ஜ.,வால் நிறைவேற்ற முடியவில்லை.
மிரட்டல்
பா.ஜ.,வினர் அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கிறார்கள். தேர்தல் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. பிரசாரம் செய்யக் கூட அனுமதிக்காமல், எதிர்க்கட்சியினரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்துக்கின்றனர். ஜனநாயகத்தில் இவை நல்லதல்ல. சர்வாதிகார ஆட்சி செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு கார்கே கூறினார்.

