‛காதல், காமம் இல்லை': சிறுமியை பலாத்காரம் செய்த காதலனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் கருத்து
‛காதல், காமம் இல்லை': சிறுமியை பலாத்காரம் செய்த காதலனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் கருத்து
UPDATED : ஜன 13, 2024 03:44 PM
ADDED : ஜன 13, 2024 03:32 PM

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைதான காதலனுக்கு ஜாமின் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, இச்சம்பவம் காமத்தால் நடக்கவில்லை. காதலால் தான் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 26 வயதான வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்தார். 2020ம் ஆண்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரை தேடிய போலீசார் சிறுமியை கண்டுபிடித்ததுடன், அழைத்து சென்ற காதலனையும் கைது செய்தனர்.
அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையின் போது அச்சிறுமி கூறுகையில் ‛‛ விரும்பிதான் வீட்டை விட்டு வெளியேறினேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். மஹாராஷ்டிராவில் வெளியே பல்வேறு இடங்களில் தங்கியிருந்தோம்''. எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், காதலன் ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிலா ஜோஷி பால்கே அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சிறுமி மைனர். ஆனால் விருப்பப்பட்டு தான் வீட்டை விட்டு, காதலனுடன் தங்கியதாக போலீசிடம் சிறுமி கூறியுள்ளார்.
பாலியல் உறவு சம்பவம் இரண்டு பேருக்கு இடையேயான ஈர்ப்பினால் ஏற்பட்டதாக தெரிகிறது. காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை எனக்கூறிய நீதிபதி காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.