"யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை": அகிலேஷ் குற்றச்சாட்டும், காங்., பதிலும்!
"யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை": அகிலேஷ் குற்றச்சாட்டும், காங்., பதிலும்!
ADDED : பிப் 04, 2024 02:01 PM

புதுடில்லி: யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு,'' விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்டவுடன் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.
அகிலேஷ் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் தனக்கு கிடைக்கவில்லை என இண்டியா கூட்டணி உறுப்பினரான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டி இருந்தார்.
காங்., பதில்
இதற்கு பதில் அளித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்ட உடன் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்களின் பங்கேற்பு கூட்டணியை வலுவாக்கும். பிப்.16ம் தேதி யாத்திரை உத்தர பிரதேசத்தில் நுழையும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.