காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்
காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்
ADDED : டிச 11, 2024 11:17 AM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆத் ஆத்மி, தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் உள்ளன. காங்கிரசுக்கு 15 இடங்களும், மற்ற இண்டியா கூட்டணி கட்சியினருக்கு 1 அல்லது 2 இடங்களும், மற்றவை ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என தகவல் பரவியது.
இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். அவரது அறிக்கை: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.