ஐதராபாத் மக்கள் கால்நடைகள் அல்ல: பிரதமருக்கு ஓவைசி பதில்
ஐதராபாத் மக்கள் கால்நடைகள் அல்ல: பிரதமருக்கு ஓவைசி பதில்
ADDED : மே 09, 2024 12:16 PM

ஹைதராபாத்: 'காங்கிரசும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியும், ஹைதராபாத் தொகுதியை ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக' பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஓவைசி, 'ஹைதராபாத் மக்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல' எனக் கூறினார்.
பிரதமர் மோடி நேற்று (மே 8) தெலுங்கானாவில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 'தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதியை காங்கிரசும், பி.ஆர்.எஸ்., கட்சியும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளது' என விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி கூறியதாவது: ஹைதராபாத் தொகுதியை ஓவைசிக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக மோடி பேசுகிறார். குத்தகைக்கு விடுவதற்கு ஹைதராபாத் மக்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல.
அவர்கள் குடிமகன்கள்; எந்தவொரு கட்சிக்கும் சொந்தமானவர்கள் அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் இந்துத்துவாவின் தீய சித்தாந்தத்தை தோற்கடித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை நம்பியுள்ளனர். இந்துத்துவா மீண்டும் தோற்கடிக்கப்படும். தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது கட்சிக்கு 6,000 கோடி ரூபாய் நன்கொடை அளித்தவர்களிடம் மோடி தொடர்பில் உள்ளார். நன்கொடைக்கு பதிலாக, அவர்களுக்கு இந்தியாவின் சொத்துக்களை குத்தகைக்கு விற்றுள்ளார். 70 கோடி இந்தியர்களை விட 21 பேரிடம் அதிக சொத்து உள்ளது. அந்த 21 பேரும்தான் மோடியின் உண்மையான குடும்பத்தார். இவ்வாறு அவர் கூறினார்.