நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் தீர்மானம் லோக்சபாவில் சமர்ப்பிப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் தீர்மானம் லோக்சபாவில் சமர்ப்பிப்பு
ADDED : ஆக 12, 2025 12:38 PM

புதுடில்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் தொடர்பாக லோக்சபாவில் 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
லோக்சபா இன்று (ஆகஸ்ட் 12) காலை கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், கடும் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை அமைதி காக்கும்படி கேட்டுப் பார்த்தும் முடியாமல் போகவே, சபையை பிற்பகல் 12:00 மணிவரை, சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
பிறகு மீண்டும் 12 மணிக்கு சபை கூடியதும், மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம் குறித்து சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம் அளித்தார். சபாநாயகர் கூறியதாவது: ரவிசங்கர் பிரசாத் உட்பட 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. குழு அளிக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். 3 பேர் கொண்ட குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபா ஒத்திவைப்பு
அதேபோல் ராஜ்யசபா காலையில் 11 மணிக்கு கூடியதுமே, எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் அவையை மதியம் 2:00 மணி வரை ராஜ்யசபா தலைவர் ஒத்திவைத்தார்.