பிரதமராக ராகுல் தான் என் 'சாய்ஸ்': கார்கே வைத்தார் 'ஐஸ்'
பிரதமராக ராகுல் தான் என் 'சாய்ஸ்': கார்கே வைத்தார் 'ஐஸ்'
ADDED : மே 31, 2024 05:58 PM

புதுடில்லி: பா.ஜ.,வை தோற்கடித்து ராகுல் பிரதமராக வர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும், பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் விரும்பியதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலின் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) நடக்க உள்ளது. அதில் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யாரென அறிவிக்கவில்லை.
இதற்கிடையே இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டில்லி வருமாறு, 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் கார்கே அளித்த பேட்டி: இந்த தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் நாட்டின் பிரதமராக பதவியேற்பார். அவர் பிரதமராக வர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து போட்டியிட்டோம்.
தற்போது தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு, ஒன்றிணைந்து பிரதமரை தேர்ந்தெடுப்போம். பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு பிரசார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். ஏனெனில் அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அதனால் பிரியங்கா போட்டியிட முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.