ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க ரூ.2 லட்சமாம்: சொல்கிறது மும்பை மெட்ரோ நிர்வாகம்
ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க ரூ.2 லட்சமாம்: சொல்கிறது மும்பை மெட்ரோ நிர்வாகம்
ADDED : ஆக 17, 2024 01:33 PM

மும்பை: மும்பையில் 13 இடங்களில் 584 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றை நட்டு பராமரிக்க ரூ. 2 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்ப்பு
மும்பையின் ஆரே காலனியில் 33 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள எம்.எம்.ஆர்.சி.எல் கார் ஷெட் திட்டத்தில் ரயில் பாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு மரம் வெட்டினால், 3 மரக்கன்றுகளை நட்டு அதனை 3 வருடங்கள் பராமரிக்க வேண்டும் என , மும்பை மெட்ரோ நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ரூ.12 கோடி
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த காட்ப்ரே பிமென்டா என்ற அமைப்பு, மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு இருந்தது.
இதற்கு மெட்ரோ நிர்வாகம், '' மெட்ரோ 3வது திட்டப்பாதையில் 13 இடங்களில் 584 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.12 கோடி செலவு செய்துள்ளோம் என பதிலளித்து இருந்தது.
சர்ச்சை
ஆனால், அந்த 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியது போன்று எந்த மரக்கன்றுகளும் பராமரிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. பல மரக்கன்றுகள் காய்ந்த நிலையிலும், மற்றவற்றில் ஆணி அடிக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. ஏற்கனவே, மரக்கன்று ஒன்றை நட்டு பராமரிக்க ரூ.800 செலவானதாக மும்பை மாநகராட்சி கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மும்பை மெட்ரோ நிர்வாகம் ரூ. 2 லட்சம் செலவு செய்ததாக கூறியது புயலை கிளப்பி உள்ளது. சில தொண்டு நிறுவனங்கள் ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்க ரூ.200 மட்டுமே செலவு செய்ததாக கூறிய நிலையில், இவ்வளவு பெரிய தொகை எப்படி செலவாகி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாரணை வேண்டும்
இது தொடர்பாக காட்ப்ரே பிமென்டா அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: அரே பகுதியில் 2,293 மரங்கள் வெட்ட அனுமதி கேட்ட நிலையில், 531 மரங்களை மட்டும் வெட்டுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. பிறகு அது 270 ஆக குறைந்தது. இதற்கு மாற்றாக புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
எங்கு மரக்கன்று நடப்பட்டு உள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மீண்டும் கேட்ட போது தான், 584 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ரூ.12 கோடி செலவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். ஒவ்வொன்றுக்கு ரூ.2.05 லட்சம் செலவானதாக கூறினர். ஆனால், அதன் நிலையை பார்த்தால் உண்மை தெரியும். பெரிய மோசடி நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.