குரங்கு அம்மை தொற்று; தேவையற்ற அச்சம் தடுப்பது அவசியம்: மாநிலங்களுக்கு 'அட்வைஸ்'
குரங்கு அம்மை தொற்று; தேவையற்ற அச்சம் தடுப்பது அவசியம்: மாநிலங்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : செப் 09, 2024 01:56 PM

புதுடில்லி: 'குரங்கு அம்மை தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம்' என மாநில அரசிற்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு அம்மை பரவல் தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இதனால் உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபருக்கு அந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்.
* மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
* நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
* மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் கை இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
* குரங்கு அம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
* பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.