7 மாதம் ஆகியும் கூட்டணி முடிவெடுக்காத காங்., திரிணமுல் காங்., சொல்லும் காரணம்
7 மாதம் ஆகியும் கூட்டணி முடிவெடுக்காத காங்., திரிணமுல் காங்., சொல்லும் காரணம்
ADDED : ஜன 30, 2024 12:03 PM

கோல்கட்டா: 'மேற்குவங்கத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி முடிவெடுக்க கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கேட்டு வருகிறோம்; 7 மாதம் ஆகியும் காங்., எதுவும் செய்யவில்லை' என திரிணமுல் காங்., பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு இடம் கொடுக்காமல் மேற்குவங்கத்தில் தனித்து போட்டி என திரிணமுல் காங்., சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: நீங்கள் ஒருவருடன் கூட்டணியில் இருக்கும்போது, முதலில் செய்ய வேண்டியது தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை முடிப்பதுதான். அதுதான் கூட்டணியின் அடிப்படை விதிமுறை. நாங்கள் ஜூன் மாதத்தில் இருந்து தொகுதி பங்கீடு ஏற்பாடு பற்றி காங்கிரசிடம் கேட்டோம். ஏழு மாதங்கள் கடந்துவிட்டன; அவர்கள் எதுவும் செய்யவில்லை.
இண்டியா கூட்டணியின் கடைசி கூட்டம் டில்லியில் நடந்தபோது கூட, மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் தொகுதி பங்கீடு பற்றி இறுதி செய்ய டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நிர்ணயித்தார். இப்போது ஜனவரி கடைசி வாரத்தில் இருக்கிறோம்; இதுவரை அவர்கள் எதுவும் செய்யவில்லை. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம். ஆனால் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த இடங்களை கூட்டணிக்கு ஒதுக்குவது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.