உயிருள்ள வரை அரசியலமைப்பை மாற்ற விடமாட்டேன்: பிரதமர் மோடி உறுதி
உயிருள்ள வரை அரசியலமைப்பை மாற்ற விடமாட்டேன்: பிரதமர் மோடி உறுதி
UPDATED : ஏப் 29, 2024 06:15 PM
ADDED : ஏப் 29, 2024 05:40 PM

மும்பை: ''நான் உயிருடன் இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன்'' என பிரதமர் மோடி பேசினார்.
மஹாராஷ்டிர மாநிலம் கராடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக, சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளை கடைப்பிடிக்க முயற்சித்து வருகிறேன். உங்கள் சேவகரான நான், உங்கள் ஆசியுடன் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கினேன். இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடைத்த நிலையில், காஷ்மீரில் உள்ள தலித்துகளுக்கான இடஒதுக்கீடு, காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலால் பறிக்கப்பட்டது.
கர்நாடக அரசு ஓபிசி இடஒதுக்கீட்டில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. நான் உயிருடன் இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன். எதிர்க்கட்சிகள் போலி வீடியோக்களை பயன்படுத்துகின்றன. இதுபோன்ற வீடியோக்களை பகிர வேண்டாம். போலி வீடியோக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

