ரேபரேலியில் போட்டியிட்டாலும் அமேதியில் என்றும் இருப்பேன்: சொல்கிறார் ராகுல்
ரேபரேலியில் போட்டியிட்டாலும் அமேதியில் என்றும் இருப்பேன்: சொல்கிறார் ராகுல்
ADDED : மே 17, 2024 04:35 PM

அமேதி: ''நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் அமேதியில் இருந்தேன், இப்போது இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.
அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அமேதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல் பேசியதாவது:
எனது அப்பா ராஜிவ் உடன் 42 ஆண்டுகளுக்கு முன்னதாக முதன்முறையாக அமேதி வந்தேன். நான் அரசியலில் எதைக் கற்றுக்கொண்டேனோ, அதை அமேதி மக்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது சாலைகளும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. இங்குள்ள மக்களுக்கும் என் தந்தைக்கும் இடையே உள்ள அன்பின் உறவை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் அமேதியில் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன். முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதி தூக்கி எறிவோம் என்று தெளிவாக கூறுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க அனுமதிப்பீர்களா? அதை அழிக்கும் சக்தி உலகில் உண்டா?
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் முதலில் நாம் செய்ய வேண்டியது. ஏனென்றால் உங்கள் குரல், உங்கள் எதிர்காலம், உங்கள் சிந்தனை அதில் பொதிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏழை மக்களுக்கு எது கொடுக்கப்பட்டிருந்தாலும் அது நில உரிமையாக இருக்கட்டும், விவசாயிகளுக்கான உதவியாக இருக்கட்டும் அல்லது பசுமைப் புரட்சியாக இருக்கட்டும், இவை அனைத்தும் இந்த புத்தகத்தின் (அரசியலமைப்பு) பின்பகுதியில் சாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

